Monday, October 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மித்ரா உயர்வு மடானி வணிக மானியத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்! – டத்தோஶ்ரீ ரமணன்

மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா முன்னெடுத்துள்ள உயர்வு மடானி வணிக மானியத் திட்டத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் 700 பயனாளிகளை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு இந்தியத் தொழில்முனைவோர் மத்தியில், குறிப்பாக பி40 – எம்40 வருமானப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே, அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இத்திட்டத்திற்காக மொத்தம் 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு உதவும் வகையில், 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் குறிப்பிட்ட டத்தோஶ்ரீ ரமணன், ஆரம்பத்தில் 700 பயனாளிகளைத் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தற்போது 8,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பண்டா ஹிலிர், லிட்டில் இந்தியா பகுதியில் இந்திய வணிகர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியத் தொழில்முனைவோர் தங்களது வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான உதவிகளின் தேவை அதிகரித்துள்ளதை விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகளை நேரடியாக அறிந்து, நடைமுறையில் உள்ள உதவித் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வணிக மானியத் திட்டத்திற்கு அப்பால், கல்வி உதவிகள், டயாலிசிஸ் சிகிச்சை, மருத்துவ உதவிகள், முதியோருக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் மித்ரா செயல்படுத்தி வருவதாக டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

சமூகத்தின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, தேவையான மேம்பாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular