Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய ஒற்றுமைக்கு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சவாலாக உள்ளன – துணை அமைச்சர் யுனேஸ்வரன்!

கோலாலம்பூர், அக 20

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு மதம், இனம் மற்றும் அரச நிறுவனம் தொடர்பான 3R விவகாரங்களுடன், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூக சமத்துவமின்மையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய சவால்களாக உள்ளன என்று தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர். யூனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வாழ்க்கைத் தர வேறுபாடுகள் காரணமாக, சமூகப் பொருளாதார இடைவெளிகள் வெவ்வேறு இன மக்களிடையே மட்டுமின்றி, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் 3R விவகாரங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவயதிலிருந்தே தேசப்பற்று மற்றும் தேசிய அடையாள உணர்வை வளர்க்கும் தளமாகத் திகழும் தடிக்கா பெர்பாடுவான் (Tadika Perpaduan) ஒற்றுமை மழலையர் பள்ளிகளை மேலும் வலுப்படுத்த தேசிய ஒற்றுமை அமைச்சு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் யூனேஸ்வரன் கூறினார்.

“ஒற்றுமை மழலையர் பள்ளிகள் மூலம் தேசப்பற்றை வளர்த்து, நாட்டைக் கட்டியெழுப்புவதில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கமாகும்.

“இப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், ‘நான் மலேசியாவின் குழந்தை’ என்ற உணர்வை உள்வாங்கும் வகையில் அவற்றை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். இதுவே நாங்கள் வளர்க்க விரும்பும் உணர்வாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 19) இரவு பெர்னாமா தொலைக்காட்சியின் Ruang Bicara நிகழ்ச்சியில், “2027 வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மண்டலங்கள் முதல் தேசிய அளவு வரை பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் ஒற்றுமை வாரம் (Minggu Perpaduan) உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அமைச்சின் விரிவான தேசியக் கட்டமைப்பு முயற்சிகளில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும் நான்கு துறைகள் மற்றும் மூன்று அறக்கட்டளைகளின் நிர்வாக மற்றும் மேம்பாட்டுச் செலவுகளுக்காக மொத்தம் RM858.79 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை (JPNIN), தேசிய ஆவணக் காப்பகம், தேசிய நூலகம் மற்றும் அருங்காட்சியகத் துறை உள்ளிட்ட அமைப்புகள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன.

இந்த நிதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், அதன் மூலம் பொதுமக்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்றும் யூனேஸ்வரன் உறுதியளித்தார்.

குறிப்பாக, நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எதிர்காலத் தலைமுறைகளுக்காகப் பாதுகாப்பதற்கு தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவுகளை இலக்கமயமாக்குவதற்குப் போதிய நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் இது மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

“நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் வரலாற்றைப் புறக்கணிக்கக் கூடாது. ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளே ஒரு நாட்டின் உண்மையான அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்; புறக்கணிக்க அனுமதிக்க முடியாது. அதனால்தான் இந்தப் பதிவுகளை இலக்கமயமாக்குவதற்குப் போதிய நிதி தேவைப்படுகிறது,” என்றார் அவர்.

நாடு முழுவதும் செயல்படும் 8,670 ருக்குன் தெத்தாங்கா (Rukun Tetangga – KRT) அக்கம்பக்கக் கண்காணிப்புக் குழுக்களும் அடிமட்ட அளவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக யூனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கு பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, அவதூறு பரப்புதல், தரவுகளைத் திரித்தல் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புதல் போன்றவை வெறுப்புணர்வைத் தூண்டி, தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

அரசியல் ஆதாயங்களுக்காகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் உட்பட, பொய்ச் செய்திகளின் பரவல் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டிய சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் பல்லினச் சமூகத்தில் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு தேசிய ஒற்றுமை அமைச்சு தனித்து செயல்பட முடியாது என்றும், இதற்காக மற்ற அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றும் யூனேஸ்வரன் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular