Monday, October 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசியாவில் “தீபாவளி” என்ற பெயரின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம்

தேசிய அளவிலான இந்து சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு என்ற வகையில், இந்து சமய விழாக்கள் மற்றும் மரபுகள் தொடர்பான விவகாரங்களில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக மலேசிய இந்து சங்கம் கருதுகின்றது. அந்த வகையில், இந்துக்களின் முக்கியமான சமயத் திருநாளான தீபாவளியைக் குறிப்பிடுவதில் “Deepavali” மற்றும் “Diwali” ஆகிய சொற்களின் பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்குத் தெளிவளிப்பது அவசியமென மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் தெரிவித்தார்

“தீபாவளி” மற்றும் “திவாலி” ஆகிய இரு சொற்களும் ஒரே புனிதமான இந்துத் திருநாளைக் குறிப்பவை என்பதுடன், மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையில் இரண்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகும். இவை இந்து சமய மரபுகளின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றன.

இருப்பினும், “தீபாவளி” என்ற பெயர் மலேசியாவின் வரலாற்று, பண்பாட்டு மற்றும் தேசிய அடையாளத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பெரும்பான்மையாக விளங்கும் தென்னிந்திய வம்சாவளி இந்துச் சமூகத்தினரால் பல தலைமுறைகளாக இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், 1951ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் (Holidays Act 1951 – Act 369) முதலாவது அட்டவணையிலும் “Deepavali” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மலேசியாவின் அதிகாரப்பூர்வ நடைமுறையில் இப்பெயர் நீண்டகாலமாக நிலைபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

காலங்காலமாக நிலைபெற்றுள்ள பண்பாட்டு மரபுகளும் தேசிய நடைமுறைகளும் படிப்படியாக மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய இந்து சங்கம் உறுதியாக உள்ளது. எனவே, அரசாங்கத் துறைகள், ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாழ்த்துச் செய்திகள், பதாகைகள் மற்றும் பொதுக் கொண்டாட்டங்களில் “Deepavali” என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்துமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளையில், பண்டிகைக் காலங்களில் இச்சொற்களின் பயன்பாடு தொடர்பாகத் தேவையற்ற சர்ச்சைகளையும் கருத்து மோதல்களையும் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய சர்ச்சைகள் இந்துச் சமூகத்திற்கோ, திருநாளின் உண்மையான நோக்கத்திற்கோ எவ்வித நன்மையையும் அளிக்காது.

எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராமல் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படும் அமைப்பு என்ற வகையில், இவ்வறிக்கை எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, தரப்பிற்கோ அல்லது சமூகத்திற்கோ ஆதரவாகவோ எதிராகவோ வெளியிடப்படவில்லை என்பதை மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துகின்றது. மலேசிய இந்துக்களின் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதுடன், பரஸ்பர மரியாதை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதே எமது நோக்கமாகும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular