Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளியா, தீவாலி? கலாசார அடையாளத்தை அரசியல் ஆயுதமாக்க வேண்டாம் – ஹரிஷ் லினேஷ்

தீபாவளி மற்றும் தீவாலி என்ற சொற்களின் பயன்பாடு தொடர்பாக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், DAPSY தலைவர் வூ கா லியோங் மீது முன்வைத்துள்ள விமர்சனங்கள் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த தேசிய DAPSY துணைத் தலைவர் ஹரிஷ் லினேஷ் செல்லுவாண்டன், கலாசார அடையாளங்களை அரசியல் மோதலுக்கான கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில், குறிப்பாகத் தமிழ் இந்தியச் சமூகத்தின் சூழலில், ‘Deepavali’ என்ற சொல் அதிகாரப்பூர்வமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் பல்வேறு மரபுகள் மற்றும் சமூகங்களிலும் ‘Diwali’ என்ற சொல் அதே பண்டிகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியச் சமூகத்தின் கலாசார அடையாளத்தைப் பாதுகாப்பது முக்கியமானது என்றாலும், சொற்களின் பயன்பாட்டில் உள்ள வேறுபாட்டை அரசியல் மோதலாகப் பெரிதுபடுத்தக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு மஇகாவும் ‘Diwali’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது

2019ஆம் ஆண்டு மஇகாவின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கான சுவரொட்டியில் “MIC Diwali Open House” என்ற தலைப்பும், “Happy Diwali” என்ற வாழ்த்தும் இடம்பெற்றிருந்ததை ஹரிஷ் லினேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், தற்போது ‘Diwali’ என்ற சொல்லின் பயன்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறதென்றால், 2019ஆம் ஆண்டு மஇகாவே அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதை எவ்வாறு அணுகுவது என்று டத்தோஸ்ரீ எம். சரவணனிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மஇகா உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே அளவுகோல் பயன்படுத்தப்படுமா?” என்றும் அவர் வினவியுள்ளார்.

மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பாக, தங்களது சொந்தச் செயல்பாடுகளையும் பதிவுகளையும் ஆராய்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், கலாசாரம் தொடர்பான விவகாரங்கள் நிலையான அணுகுமுறை, நியாயம் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.

அதேபோல், வூ கா லியோங் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகளும் அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் முழுமையான சூழலின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், வெறும் ஊகங்களின் அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியச் சமூகத்தின் நலன் அரசியல் மோதலுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது

இந்தியச் சமூகத்தின் நலன்களை நீண்டகால அரசியல் மோதல்களை உருவாக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது என்று ஹரிஷ் லினேஷ் தெரிவித்துள்ளார்.

“பிற சமூகங்களைச் சிறுமைப்படுத்தாமல் தமிழ் அடையாளத்தைப் பாதுகாக்க முடியும். அதேபோல், வரலாற்று உண்மைகளைப் புறக்கணிக்காமல் நமது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி மற்றும் தீவாலி என்ற சொற்கள் தொடர்பான விவகாரத்தை அனைத்துத் தரப்பினரும் விவேகத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் தேசிய ஒற்றுமை உணர்வுடனும் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“கலாசாரம் மதிக்கப்பட வேண்டும். உண்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே அளவுகோல் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் என்பது பகைமையால் அல்ல, பொறுப்புணர்வால் வழிநடத்தப்பட வேண்டும்,” என்று ஹரிஷ் லினேஷ் செல்லுவாண்டன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular