Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இன, மத வேறுபாடுகளைப் பிளவுக்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் – யுனேஸ்வரன் ராமராஜ்.

கோலாலம்பூர், அக 14

மலேசியாவின் இன, மத மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை நாட்டின் தனித்துவமான பலமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட தேசிய ஒற்றுமைத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், இனவாத உணர்வுகள், தப்பான முன்முடிவுகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் இந்த ஒற்றுமை சீர்குலையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Pusat KOMAS ஏற்பாடு செய்த 13ஆவது தேசியப் பாகுபாடு எதிர்ப்பு மாநாட்டில் முக்கிய உரையாற்றிய அவர், மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் Pusat KOMAS இயக்குநர் ஜெரால்ட் ஜோசப், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருணை நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் மியின்ட், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இனப் பாகுபாடு எதிர்ப்பு ஆலோசகர் ஹனே ஹன்சாவா, மனித உரிமைகள் ஆணையத்தின் (SUHAKAM) ஆணையர் மெலிசா அகிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், கலந்துரையாடல் குழு உறுப்பினர்கள், விருந்தினர்கள், அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்கும் யுனேஸ்வரன் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஒற்றுமை என்பது ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல

தனது முக்கிய உரையில், ஒற்றுமை என்பது ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்வதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்றும், ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு, பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்குவதையும் உள்ளடக்கியது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூகப் பொருளாதார இடைவெளிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாகுபாடுகளின் காரணமாக எந்தவொரு குடிமகனும் வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, சமூகத் தலைவர்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள், இன மற்றும் மத விவகாரங்களை வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கோ அல்லது தனிப்பட்ட நலன்களை அடைவதற்கோ பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“நாம் கருத்துகள், கலாசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளில் வேறுபடலாம். ஆனால் அந்த வேறுபாடுகள் நமக்கிடையிலான உறவுகளைச் சீர்குலைக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

நல்லிணக்கமும் சமூக நீதியும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்

தேசிய ஒற்றுமைத் துணை அமைச்சர் என்ற முறையில், ருக்குன் நெகாரா கொள்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன், அனைத்து மக்களின் நலனுக்காக சமூக நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக யுனேஸ்வரன் தெரிவித்தார்.

“மலேசியா நம் அனைவருக்கும் பொதுவான வீடு. வேறுபாடுகள் நம்மைப் பிரிக்க அனுமதிக்காமல், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பலமாக நமது பன்முகத்தன்மையை மாற்றுவோம்,” என்று அவர் கூறினார்.

இறுதியாக, தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அதில் முக்கியப் பங்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒற்றுமை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்,” என்று யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular