Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சமய நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவோம்.

பெட்டாலிங் ஜெயா அக் 14
தைப்பூசத் திருவிழாவுடன் தொடர்புடைய சில இந்து சமயச் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் பிற சமயத்தை சார்ந்த ஒருவர் பங்கேற்றதாக கூறப்படும் காணொளிகளும் அது தொடர்பான கருத்துகளும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருவதை மலேசிய இந்து சங்கம் கவனத்தில் கொள்வதாக அதன் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண்
தங்க. கணேசன் கூறினார்.

முதலில், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளின் உண்மைத்தன்மை, சம்பவத்தின் சூழ்நிலை மற்றும் அதன் முழுமையான பின்னணி ஆகியவை இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மலேசிய இந்து சங்கம் வலியுறுத்த விரும்புகிறது. எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை மேற்கொள்வதையும், அவசர முடிவுகளுக்கு வருவதையும், தேவையற்ற தவறான புரிதல்களுக்கும் சமய உணர்வுகளைப் பாதிக்கும் சூழ்நிலைகளுக்கும் வழிவகுக்கும் தகவல்களைப் பரப்புவதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்து சமயம் என்பது ஓர் இறைநெறியாகவும் வாழ்வியல் நெறியாகவும் விளங்குவதுடன், அன்பு, சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வு போன்ற உயரிய பண்புகளை வலியுறுத்துகிறது. இந்து ஆலயங்களும் சமய மற்றும் பண்பாட்டு விழாக்களும் பல்வேறு சமய, இனப் பின்னணிகளைக் கொண்ட மக்களை வரவேற்று, அவர்கள் நமது மரபுகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளவும், மரியாதையுடன் கண்டுணரவும் வாய்ப்பளித்து வந்துள்ளன. இது நமது பல்லின, பல்சமய நாட்டின் நல்லிணக்க உணர்வைப் பிரதிபலிக்கிறது.

அதேவேளையில், கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இஸ்லாம் கூட்டரசின் சமயமாக விளங்கும் நிலையை மலேசிய இந்து சங்கம் அங்கீகரித்து மதிக்கிறது. அதே அரசியலமைப்பு, ஏனைய சமயங்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் பின்பற்றப்படுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதையும் மதிக்கிறோம். சமய நடைமுறைகள் தொடர்பான எந்தவொரு விடயமும் மலேசியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சமய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டும்.

இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த ஒருவர் தொடர்பான விவகாரங்களில், அவரது சமயக் கடமைகள், நடத்தை அல்லது பொருந்தக்கூடிய இஸ்லாமிய சமய விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளாரா என்பது குறித்த கேள்விகளை, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சமய அதிகாரிகளிடமே விட்டுவிடுவது பொருத்தமானது என மலேசிய இந்து சங்கம் கருதுகிறது. அத்தகைய விவகாரங்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் உரிய நடைமுறைகளுக்கும் ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆராயப்பட்டு கையாளப்பட வேண்டும்.

எனவே, இந்து சமுதாயத்தினர், சமய அமைப்புகள், ஆலய நிர்வாகத்தினர், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்விவகாரத்தில் நிதானத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுப்பதையும், ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளை வெளியிடுவதையும், நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடிய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பிற சமயத்தைச் சார்ந்த ஒருவரின் சமயக் கடமைகள் தொடர்பான சர்ச்சையில் இந்து சமுதாயம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமோ, அதனால் ஏற்படக்கூடிய நன்மையோ எதுவுமில்லை. இத்தகைய விவகாரங்கள் உரிய அதிகாரிகளால் நியாயத்துடனும் விவேகத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் கையாளப்பட வேண்டும்.

பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் பரஸ்பர புரிந்துணர்வுடனும் மரியாதையுடனும் ஒன்றிணைந்து வாழ்வதே மலேசியாவின் மிகப்பெரிய பலமாகும். தனிப்பட்ட சம்பவங்களோ, உறுதிப்படுத்தப்படாத சமூக ஊடகப் பதிவுகளோ அல்லது பொறுப்பற்ற பொதுக் கருத்துகளோ, பல தலைமுறைகளாக மலேசிய மக்களிடையே கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் சீர்குலைக்க நாம் இடமளிக்கக்கூடாது.

அனைத்து சமயங்களின் மரபுகளையும் உணர்வுகளையும் மதித்து, சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும், நமது அன்பிற்குரிய நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதிலும் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்படும் என
தங்க. கணேசன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular