Saturday, October 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலாக்கா தேர்தல்: வாக்காளர்களின் ஆதரவு நம்பிக்கையளிக்கிறது – டத்தோஸ்ரீ ரமணன் தகவல்!

அலோர் காஜார், அக். 18 –
எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சிக்கு வாக்காளர்களிடையே சாதகமான ஆதரவு அலை வீசி வருகிறது என அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அலோர் காஜார், கெரிஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ‘ஐ-லிண்டுங் யு கெகார் @ மலாக்கா’ பெருந்திரள் நிகழ்ச்சியைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் சாதகமான கருத்துகள் கட்சிக்கு வலுவான நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சருமான ரமணன் மேலும் கூறுகையில், வரவிருக்கும் நவம்பர் 14 மாநிலத் தேர்தலுக்காகக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

வெளி மாநிலக் கிளைகளின் ஆதரவோடு உள்நாட்டுக் தலைவர்கள் நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வருகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதால், இதுவும் தேர்தலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தேர்வு குறித்துப் பேசிய ரமணன், மலாக்கா தேர்தலுக்கான பி.கே.ஆர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு அக்டோபர் 24 அன்று குருபோங்கில் உள்ள ஹங் ஜெபாட் அரங்கில் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் மலரும் மலாக்கா

முன்னதாக, சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட ‘ஐ-லிண்டுங் யு கெகார் @ மலாக்கா’ நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமணன், ‘மடானி’ அரசின் கீழ் சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

புதிய வரவு செலவுத் திட்ட அறிவிப்பின்படி, ‘லிண்டுங் 24 ஜாம்’ – ‘லிண்டுங் கெண்டிரி’ திட்டங்களில் பங்களிப்போருக்கு 150 ரிங்கிட் வரை கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படும், இதனால் நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.

மேலும் இந்நாளில், மலாக்காவைச் சேர்ந்த 400 இல்லத்தரசிகளுக்கு ‘லிண்டுங் காசே’ திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.

அத்துடன் மலாக்காவின் வரலாற்றுப் பெருமைமிக்க பாரம்பரிய பேச்சா ஓட்டுநர்களுக்கு பெர்கேசோ அமைப்பின் மூலம் சிறப்பு நிதியுதவியும் சமூகப் பாதுகாப்பும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular