Saturday, October 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அறிவிக்கப்பட்ட முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை – மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர், அக் 15

மலேசியாவில் தரவு மையங்கள் (Data Centres) துறையில் அறிவிக்கப்பட்ட முதலீடுகளின் மதிப்புக்கு ஏற்ப, மலேசியர்களுக்கு உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை நேரடியாகப் பொருந்தவில்லை என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

தரவு மையங்களால் நாட்டுக்குக் கிடைக்கும் உண்மையான பொருளாதாரப் பலன்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இத்துறையில் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தரவு மையங்கள் அதிக மூலதனம் தேவைப்படும் முதலீட்டுத் துறை என்று ரமணன் குறிப்பிட்டார். முதலீட்டுத் தொகையின் பெரும்பகுதி உயர்தர உபகரணங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளுக்காகச் செலவிடப்படுகிறது என்றார்.

இதனால், இத்துறையில் உருவாகும் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் உயர்ந்த மதிப்பைக் கொண்டவையாகவும், சிறப்புத் தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படுபவையாகவும் உள்ளன.

எனினும், தரவு மைய முதலீடுகள் மூலம் இதுவரை எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையை அமைச்சர் வெளியிடவில்லை.

12 முக்கிய வேலைவாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டன

தரவு மையத் துறையில் மலேசியர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான திறன்களை வளர்க்க மனிதவள அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, Talent Corporation Malaysia Berhad (TalentCorp) நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் தொழில்துறை நிறுவனங்களுடன் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

தரவு மையங்களின் ஒவ்வொரு செயல்பாட்டு நிலையிலும் தேவைப்படும் திறன்கள், அதிகத் தேவை உள்ள பணிகள், கல்வித் தகுதிகள் மற்றும் பயிற்சிக்குத் தேவைப்படும் காலம் ஆகியவற்றை அடையாளம் காண்பதே இப்பயிலரங்குகளின் நோக்கமாகும்.

அதில், அதிகத் தேவை உள்ள 12 வகையான வேலைவாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில்:

  • மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள்
  • தகவல் தொழில்நுட்ப (IT) திட்ட மேலாளர்கள்
  • தகவல் தொழில்நுட்ப அமைப்பு வடிவமைப்பு நிபுணர்கள்
  • வலையமைப்புப் பாதுகாப்புப் பொறியாளர்கள்
  • தரவு மையத் தொழில்நுட்ப வல்லுநர்கள்

ஆகிய பணிகள் அடங்குகின்றன.

இந்த 12 பணிகளில், எட்டு பணிகளுக்கு பட்டப்படிப்புத் தகுதி தேவைப்படுகிறது. ஒரு பணிக்கு டிப்ளோமா தகுதியும், இரண்டு பணிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) தகுதியும் தேவைப்படுகின்றன.

மற்றொரு பணியான மின்சார இயந்திரப் பராமரிப்பாளர் (Chargeman) பணிக்கு, மலேசியக் கல்விச் சான்றிதழான SPM பெற்றிருப்பதுடன், எரிசக்தி ஆணையத்தின் தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

“தரவு மைய முதலீடுகள் மூலம் உருவாகும் உயர் திறன் வேலைவாய்ப்புகள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் TVET பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் அதிக மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன” என்று ரமணன் தெரிவித்தார்.

பந்தார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அறிவிக்கப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிடுகையில், தரவு மைய முதலீடுகள் மூலம் மலேசியர்களுக்கு உண்மையில் உருவாக்கப்பட்டுள்ள உயர் திறன் வேலைவாய்ப்புகளின் தற்போதைய எண்ணிக்கை என்ன என்பதை அவர் கேட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular